பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கடவுள் வாழ்த்து

3


பாதங்களை நாம் இடைவிடாது நினைத்தல் வேண்டும். அவ்விதம் நினைத்தால் கடல் போன்று பரந்துள்ள எல்லாத் துன்பங்களையும் நாம் கடந்து விடலாம். மற்றவர் இத்துன்பங்களைக் கடத்தல் அரிது. 8

9.கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

ஒருவனுக்குக் கண், காது, மூக்கு முதலிய பொறிகள் இருந்தும் அவை பார்த்தல், கேட்டல், முகர்தல் முதலிய தொழில்களைச் செய்யாவிட்டால் அவற்றால் அவனுக்குச் சிறிதும் பயனில்லை. அவ்வாறே எண்வகைக் குணங்களையும் உடைய கடவுளின் பாதங்களை வணங்காத் தலை, கை முதலியன சிறிதும் பயன் அற்றவையே ஆகும்.

கோள் இல் பொறி - (புலன்களைக்) கொள்ளுதல் இல்லாத பொறி; எண் குணம் - மேல் எட்டுப் பாடல்களிலும் கடவுளுக்குக் குறிப்பிட்டுள்ள குணங்கள். 9

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

பிறப்பாகிய பெரிய கடலை நாம் கடக்க விரும்பினால் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு துதிக்காதவர்கள் பிறந்து பிறந்து துன்புறுவர்.

கடவுள் திருவடியாகிய தெப்பத்தைக் கொண்டு பிறவிக் கடலைக் கடத்தல் வேண்டும். 10

2. வான் சிறப்பு


1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மழையால் உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆதலால், மழையானது அவ் வுயிர்களுக்குச் சாவா மருந்து போன்றது. 11