பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிந்து தெளிதல்

131


உள்ளவற்றைக் கொண்டு அவன் நல்ல குணம் உடையவன் அல்லது தீய குணமுடையவன் என்பதைக் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

குற்றமேயில்லாதவர் இலர். ஆதலால், குணம் குற்றங்களை ஆய்ந்து குற்றம் மிகுதியாயிருந்தால் வினைக்குரியவனாகக் கொள்ளற்க. 504

5.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

மக்களின் பெருமையை அறிவதற்கும், அவர்தம் சிறுமையை அறிதற்கும் அவரவர் செய்யும் செயல்களே உரை கல்லாக இருக்கின்றன.

கட்டளைக் கல்-உரை கல்; பொன்னை உரைத்துப் பார்த்து அதன் தரத்தை மதிப்பிடும் கல். 505

6.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

எத்தகைய ஆதரவும் அற்றுத் திரிவாரை நம்பித் தெளிதல் கூடாது. அவர் உலகத்தவரோடு தொடர்பு சிறிதும் இல்லாதவர். ஆதலால், அவர் பழி பாவங்கட்கும் அஞ்ச மாட்டார்.

அற்றார்-ஆதரவு அற்றவர்; சுற்றத்தவரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் என்றும் கூறலாம். தேறுதல்-தெளிதல்;: ஒம்புக-விட்டொழிக. 506

7.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொள்ளாதிருப்பாரை அவர் மீது வைத்த அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல் எல்லா வகையான அறியாமையையும் உண்டாக்கும்.

காதன்மை-ஆசை, அன்பு; கந்து-பற்றுக்கோடு. 507

8.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.