பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைச்சு

167



களை இன்சொல் கூறல், பொருள் தந்து உதவல் முதலியவைகளால் பிரிந்து போகாமலும் காப்பாற்றிக் கொள்ளுதலும், முன்னரே பல்வேறு காரணங்களால் பிரிந்து இருப்பவர்களை அவரவர்கட்கு ஏற்றவைகளை உதவி, சேர்த்துக் கொள்ளுதலும் ஆகிய இவைகளில் வல்லமை பெற்றவனே சிறந்த அமைச்சனாவான்.

பேணிக் கொளல்-அவரவர்கட்கு வேண்டியவைகளை உதவித் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல். 633


4.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.

ஒன்றைச் செய்வதற்கு முன்பு நன்றாக ஆராய்ச்சி செய்தலும், செய்யத் தக்கது என்று தோன்றினால் அச்செயல் முடிவு பெறும் வகையில் நன்கு எண்ணிச் செய்தலும், இச்செயலைச் செய்யலாமா செய்யக் கூடாதா என உள்ளத்தில் குழப்பம் ஏற்படுமானால், நன்கு சிந்தித்து இரண்டில் ஒன்றைத் துணிந்து சொல்லும் ஆகிய இவற்றில் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சன் ஆவான்.

தேர்தல்-தேர்ந்து அறிதல்; ஒருதலையாச் சொல்லுதல்-இருவகை எண்ணங்களில் ஒன்றைத் துணிந்து சொல்லுதல். 634


5.அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

தான் ஒன்றைத் தெரிவிக்க நேர்ந்த போது, அதில் உள்ள நீதி அநீதிகளை உணர்ந்து, அறிவோடும் அமைதி வாய்ந்த தன்மையோடும் அதனைத் தெரிவிக்கக் கூடிய சொல்லையுடையவனாயும், அவ்விதம் சொல்லுவதனால் விளையக் கூடிய நன்மை தீமைகளை எந்தக் காலத்தும் உணர்ந்திருப்பவனாயும் உள்ள அமைச்சனே ஒன்றைக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான்.

அறன்-தரும நெறி அல்லது கடமை; ஆன்ற-அறிவு நிரம்பிய; அமைந்த-பொறுமையோடு கூடிய; திறன்-விளையத்தக்க நன்மை தீமைகள்; தேர்ச்சித் துணை-கலந்து ஆலோசித்தற்குத் தகுந்த துணைவன். 635