பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

திருக்குறள்


 நண்பர்களைத் தம்மிடமிருந்து பிரியவொட்டாமல் மேலும் நட்பினை உண்டாக்குவதோடு, நண்பர்கள் அல்லாத பகைவர்களும், அந்தப் பகைமை ஒழிந்து தம்மிடம் நட்பு முறை பாராட்டத்தக்க சொற்களை ஆய்ந்து பேசுவதே பேச்சு வன்மையாகும் என்றும் இக்குறளுக்குப் பொருள் கூறலாம்.

கேட்டார்-நண்பர்; கேளார்-பகைவர்; வேட்ப- விரும்பிக் கேட்கும் படி; பிணித்தல்-சேர்த்தல், நண்பராகச் செய்தல், தகை அவாய்- தன்மையை அவாவி, அஃதாவது விரும்பி என்றும் பொருள் கொள்வர். 643

4.திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினுாஉங்கு இல்.

ஒருவர் ஏதேனும் சொல்ல விரும்பும் போது நன்றாக ஆய்ந்து இடம் பொருள் உணர்ந்து அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற சொல்லையே சொல்லுதல் வேண்டும். ஏனென்றால், நீதியை நிலைக்கச் செய்வதற்கும், அடைய விரும்பும் பொருளை அடைவதற்கும், அந்தச் சொல் வன்மையைக் காட்டிலும் சிறந்தது வேறொன்று இவ்வுலகில் இல்லை.

திறன்-எந்த எந்தச் சமயத்தில் எதை எதை எந்த எந்த வகையில் சொல்ல வேண்டுமோ, அந்த வகைகளையெல்லாம் எண்ணிச் சொல்லும் திறமை. 644

5.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

ஒருவர் ஒரு சொல்லைச் சொல்லும் போது மற்றொருவர் அச்சொல்லை மறுத்துச் சொல்லாத வண்ணம் நன்கு சிந்தித்துப் பார்த்தே சொல்லுதல் வேண்டும். 645

6.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

தாம் ஒன்றைச் சொல்லும் போது, பிறர் விரும்பி அதை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை மட்டும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவ்விதம் நடத்திய குற்றமற்ற பேச்சுச் சிறப்பினை உடையவர்தம் கொள்கையாகும். 646