பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

திருக்குறள்



8.கடிந்த கடிந்தொரார் செய்வார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

அறிவுடையோரால் வெறுக்கப் பெற்ற செயல்களைத் தாமும் வெறுத்து நீக்காமல் செய்ய முயல்வாருக்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும், அவை துன்பத்தையே தரும்.

கடிந்து-வெறுத்து ஒதுக்கிய செயல்கள்; கடிந்து-வெறுத்து;ஒரார்- நீக்காதவர்; பீழை-துன்பம். 658

9.அழக்கொண்ட எல்லால் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பிறர் வருந்தும்படி ஒருவன் பெற்ற பொருள்கள் யாவும், அவனும் அவ்விதமே வருந்தும்படி ஒழிந்து போகும். நல்ல வழியில் பெற்ற பொருள்கள் அவ்விதம் பெற்றவனை விட்டு நீங்குதல் கூடும். எனினும் பின்னர், வேறோர் வகையில் அவை அவனுக்கு நன்மையைத் தரும். 659

10.சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலந்துள்நீர் பெய்திரீஇ யற்று.

தீய செயலால் பொருள் தேடி, அப்பொருளைக் காப்பாற்ற எண்ணுதல், உலராத பச்சைக் களிமண்ணால் செய்யப் பெற்ற மண் பாண்டத்துள் நீரைப் பெய்து அதைக் காப்பாற்ற முயல்வதற்குச் சமமே ஆகும்.

சலம்-தீய செயல்கள், வஞ்சனை; ஏமார்த்தல்-ஏமம் செய்தல், பாதுகாத்தல்; இரீஇயற்று-இருத்திய அத்தன்மைத்து. 660

67. வினைத்திட்பம்


1.வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்று சொல்லப் படுவது ஒருவன் உள்ளத்தின் உறுதியே ஆகும். மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும். -

மற்றவை.கருவி, உபாயம் முதலியன; படை, அரண், நட்பு முதலியவைகளையும் கொள்ளலாம். வினைத்திட்பம்-செயலின் கண் உறுதியாய் இருத்தல். 661