பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினை செயல்வகை

177



10.எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

எத்தகைய அரண்களை ஒருவர் பெற்றிருப்பினும், தாம் செய்யும் தொழிலில் அவருக்கு உள்ள உறுதி இல்லாதிருக்குமேல், அவரை உலகம் விரும்பிப் போற்றாது.

எனைத்திட்பம்-படை, அரண், நட்பு முதலிய அரண்கள்; செல்வம், கல்வி, உறவு என்றும் கூறுவர். 670

68. வினை செயல்வகை


1.சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

ஒரு செயலைக் குறித்து ஆராய்ச்சி செய்வதன் முடிவு அச்செயலைச் செய்து முடிக்கத் துணிவு கொள்ளுதலே ஆகும். அங்ஙனம் துணிந்த செயலில் காலந் தாழ்ந்து நிற்பது குற்றமாகும்.

சூழ்ச்சி-ஆராய்ச்சி செய்தல்; தாழ்ச்சி-காலம் தாழ்த்தல். 671

2.தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

நன்றாக எண்ணி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒன்றை நிதானமாகவே செய்தல் வேண்டும். காலங்கடத்தாமல் உடனே செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்வதில் சிறிதும் காலம் கடத்துதல் கூடாது.

தூங்குதல்-தாமதித்தல் நிதானமாகச் செய்தல். 672

3.ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

செய்ய இயலும் இடமெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; அவ்விதம் செய்ய இயலாத காலத்து அதே எண்ணமாக இருந்து, இயலும் இடம் பார்த்துச் செய்தல் வேண்டும்.