பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

திருக்குறள்



ஒல்லும்வாய்-இயலும் இடம்; ஒல்லாக்கால்-செய்ய இயலும் இடம் நேராதபோது; வாய்-இடம்.

குறிப்பு: 'வினை'என்பதற்குப் பரிமேலழகர் 'போர்' என்றே பொருள் கொள்ளுகின்றார்; போர் செய்ய இயலாத போது சாம பேத தான தண்டங்களுள் ஒன்றைச் செய்க என்று அவர் பொருள் கூறுகின்றார். 673

4.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும்.

செய்யத் தொடங்கிய ஒரு செயல், தீர்க்கத் தொடங்கிய ஒரு பகை ஆகிய இரண்டனையும் அரைகுறையாக விட்டு வைத்தல் கூடாது. அவ்வாறு விட்டு வைக்க எண்ணினால், தீயின் ஒரு பகுதியை மட்டும் அணைக்காமல் விட்டு வைத்தால், அஃது எவ்விதம் பின் வளர்ந்து ‘கெடுதியை விளைவிக்குமோ, அவ்விதம் அந்த அரைகுறைச் செயலும் பகைமையும் கெடுதியும் விளைவிக்கும்.

எச்சம்-எஞ்சிய பகுதி;தெறும்-கெடும். 674

5.பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது அதற்கு வேண்டிய பொருள், அதற்கு ஏற்ற கருவி, தகுந்த காலம், செயல் முறை, செய்தற்குரிய இடம் ஆகிய இந்த ஐந்தனையும் மயக்கந் தீர எண்ணிப் பார்த்த பின்பு, அந்தச் செயலைச் செய்ய வேண்டும். 675

6.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

ஒரு தொழிலைச் செய்யும் போது அது முடியும் வகையும், இடையில் வரக் கூடிய இடையூறும், அச்செயல் வெற்றிகரமாக முடியும் போது அதனால் அடையக் கூடிய பெரிய பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். 676

7.செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.