பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

திருக்குறள்



காலத்தால் தக்கது அறிதல். சமயோசித அறிவின்படி நடத்தல். 686


7. கடன் அறிந்து காலம்கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

தான் மேற்கொண்டுள்ள செயலின் நன்மையை மனத்திற் கொண்டு. அதனை முடித்தற்கு ஏற்ற சமயத்தையும் உள்ளத்திற் கொண்டு, தக்க இடத்தையும் தெரிந்து கொண்டு, இவைகளை யெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்துத் தன் அரசன் தெரிவித்த செய்தியைத் தெரிவிப்பவனே தூதர்களில் சிறந்தவனாவான்.

விளக்கம்: தூதர்களுள் இரு வகை உண்டு. தானே தன் கடமையை அறிந்து இடம் காலங்களுக்கு ஏற்ற வண்ணம் தன் அரசன் தெரிவித்த செய்தியைச் சுருக்கியும், விளக்கியும் கூறுபவன் தலைசிறந்த துாதுவன் ஆவான். மற்றவன் அரசன் கூறியதை அவன் கூறியபடியே கூறுபவன்.

இவர்களுள் தலையாய துாதுவனின் இலக்கணங் கூறுவது இக்குறள். 687


8.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.

உள்ளத்தாலும், உடலாலும் தூய்மையுடைமை, போதிய பாதுகாப்புடைமை, என்ன தீங்கு நேர்ந்தாலும் தாங்கத் தக்க உள்ளத் துணிவுடைமை ஆகிய இம்மூன்றினிடத்தும் என்றும் வழுவாது வாய்மைத் தன்மை பெற்றிருத்தலே தூதுவனின் குணம் ஆகும்.

இம்மூன்றின் வாய்மை-தூய்மை, துணைமை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றினும் வழுவாது நிற்தம் உண்மைத் தன்மை; வழியுரைப்பான்-அரசன் கூறிய வழியின்படி தூது உரைப்பவன். 688


9.விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.

குற்றமான சொற்களை வாய் தவறியும் சொல்லாத உள்ள உறுதியுடையவனே தன் அரசன் சொல்லி அனுப்பிய சொற்களை வேற்றரசருக்குச் சொல்லத் தகுதியுடையவனாவான்.