பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிப்பறிதல்

187



முகக் குறிப்பினாலே உள்ளக் கருத்தை அறிய வல்லவரை உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதாயிருப்பினும் அதனைக் கொடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இக்குறள் அரசர்க்கு ஏற்றது என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். உறுப்பினுள் என்பதற்கு நாட்டின் இன்றியமையா உறுப்புக்களான யானைப் படை, குதிரைப் படை முதலிய படைகளைக் குறிப்பர். சிலர் உடலிற் சிறந்ததாகிய கண் போன்ற உறுப்பினையும் குறிப்பர். 703

4.குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போர் அனையரால் வேறு.

ஒருவர் மனத்தில் எண்ணியதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ள வல்லவரோடு, மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும், அறிவால் வேறுபட்டவரேயாவர்.

கூறாமலேயே அறிந்து கொள்ள இயலாதவர் மனிதர் அல்லர்; அறிவிற் குறைந்த விலங்கு அல்லது மரம் முதலியவைகட்குச் சமமானவர் என்பதை வள்ளுவர் தம் உள்ளக் குறிப்பாலேயே விளக்குதல் அறிந்து இன்புறத் தக்கது. 704

5.குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?

குறித்ததைக் காண வல்ல கண்களால் பிறர் உள்ளக் குறிப்பை அறிய இயலா விட்டால், உறுப்பினுள் சிறந்த அக்கண்களால் என்ன பயன் ?

உணராவாயின்-உணர இயலாதனவாயின்; பயத்தவோ-என்ன பயனைச் செய்வன? பயன் சிறிதும் இல்லை.

குறிப்பறியாதார் கண்ணிருந்தும் குருடரேயாவார் என்பது கருத்து. 705

6.அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

தன்னை அடுத்த பொருளின் வடிவத்தைக் காட்ட வல்ல பளிங்கு போல ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ள குணத்தை முகமானது காட்டிக் கொடுத்து விடும்.

அடுத்தது-தனக்கு எதிரில் இருப்பது; கடுத்தது-மிகுந்து தோன்றுவது. 706