பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

திருக்குறள்



7.முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

ஒருவன் உள்ளமானது ஒன்றை விரும்பினாலும், வெறுத்தாலும் அதனை அவனுடைய முகம் முற்பட்டுத் தெரிவித்து விடும். ஆதலால், அம்முகத்தை விட அறிவின் மிக்கது வேறொன்று உண்டோ? இல்லை.

முதுக்குறைவு-பேரறிவு; உவத்தல்-விரும்புதல்; காய்தல்-வெறுத்தல்; முந்துறும்-முற்பட்டுத் தெரிவித்து விடும். 707

8.முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.

ஒருவனுடைய உள்ளத்தைக் குறிப்பாலறிந்து, அவனுக்கு உற்றதை உணரக் கூடியவரைப் பெற்றால், அவன் அவர் முகம் நோக்கி நிற்றல் ஒன்றே போதும். வாயினாலோ, செய்கையினாலோ, வேறு எத்தகைய குறிப்பினாலோ அவருக்கு அவன் தன் நிலையைத் தெரிவிக்க வேண்டியதேயில்லை என்பது குறிப்பு. 708

9.பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

ஒருவருடைய கண் நோக்கின் வேறுபாட்டை உணரும் திறமுடையவரைப் பெற்றால், அவருக்கு மற்றையவரின் பகைமையையும் நட்பையும் அவர் கண்களே அறிவித்து விடும்.

கண்களின் நோக்கு வேறுபாட்டைக் கொண்டு உள்ளத்து நிகழ்வதை அறிய வல்லவர் பிறர் பகையையும் நட்பையும் கண்களாலேயே அறிந்து கொள்வர் என்பது கருத்து. 709

10.நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

யாம் நுட்பமான அறிவுடையோம்’ என்று சொல்லிக் கொள்ளத் தக்க அறிவுடைய அமைச்சர் முதலியோர், பிறர் உள்ளக் கருத்துக்களை அறிந்து கொள்ளப் பயன்படுத்தும் அளவுகோல் யாது என்று ஆராய்ந்து பார்க்குங்கால், அது கண்ணைத் தவிர்த்து வேறு எத்தகைய கருவியும் இல்லையாம்.