பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

திருக்குறள்



3.அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறிவார் வல்லதூஉம் இல்.

அவையின் தன்மை அறியாமல் ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர் சொல்லின் கூறுபாடும் அறியார்; கற்று வல்ல கலையும் அவர்க்கு இல்லை.

சொல்லின் வகையறியும் திறனும் சொல்வன்மையும் இருந்தும் ஒருவர் சபையின் தன்மையறியாது பேசுவாராயின் அவை இரண்டும் இல்லாதவராக எண்ணப்படுவர். 713

4.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்.
வான்சுதை வண்ணம் கொளல்.

அறிவிற் சிறந்தவர் முன்பு தாமும் அறிவிற் சிறந்தவராக இருந்து பேசுதல் வேண்டும்; அறிவில்லாதவர் குழுமியுள்ள அவைக் களத்திலே வெண்சுண்ணம் போல் இருத்தல் வேண்டும்; அஃதாவது ஒன்றும் அறியாதவர் போல் இருத்தல் வேண்டும்.

ஒளியார்-ஒள்ளியார், அறிவில் மிகுந்தவர்; வெளியார்-வெள்ளிய அறிவுடையார், அஃதாவது அறிவில்லாதவர்; வான்சுதை-வெண்மையான சுண்ணாம்பு.

கருத்து: அறிவில்லாதவர் முன்பு சிறந்த நுண்ணிய கருத்துக்கள் பயன்படா; அவர்கள் பேசும் சொற்கள் போன்ற சொற்களைக் கொண்டே அவர்கட்கு ஏற்றவாறு பேசுதல் வேண்டும். 714

5.நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

தம்மைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள் குழுமியுள்ள அவைக் களத்தின் முன்பு தாம் முன்னதாக ஒன்றும் பேசாமல் நாவடக்கத்துடன் இருத்தல் நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றுள்ளும் மிகவும் சிறந்தது.

முதுவர்-தம்மினும் அறிவிற் சிறந்தவர்; முந்து-முற்பட்டு; கிளவா-பேசாத; கிளத்தல்-சொல்லுதல்; செறிவு- நாவடக்கம்.

கருத்து: வயது, அறிவு, குணம் முதலியவற்றால் தம்மிலும் மூத்தவர்கள் ஒன்றைக் குறித்துப் பேசிய பின்பே, தாமும் பேசுதல் வேண்டும். 715