பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவையறிதல்

191



6.ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

விரிவான நூற்பொருளைக் கேட்டு அவற்றின் உண்மையை ஆராய வல்லவர் குழுமியுள்ள அவையின் கண் சொற் சோர்வு படுதல், ஒழுக்க நெறியிலே சிறந்தவர் அந்த நெறியிலிருந்து தவறி நடந்தால் அஃது எத்தகைய குற்றமாகக் கருதப்படுமோ அத்தகைய குற்றமாகக் கருதப்படும். , ஆறு-நல்லொழுக்கம்; நிலை தளர்தல்-நல்வழியிலிருந்து தவறி நடத்தல்; வியன்புலம்-விரிந்த அறிவு, அகன்ற நூற்பொருள்கள்; ஏற்று-உட்கொண்டு; இழுக்கு-குற்றம்.

'ஆற்றின் நிலை தளர்ந்தற்றே' என்பதற்கு 'ஆற்று வெள்ளத்திலே அகப்பட்டுக் கரையேற இயலாமல் தவிக்கும் ஒருவன் நிலை போன்றது’ என்று பொருள் கூறுவாரும் உண்டு. 716

7.கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து.

குற்றம் நீங்கச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவைக் களத்தின் முன்பு சொல்லுவதால் பல நூல்களையும் கற்று அதன் பயனையும் அறிந்துள்ளவரது கல்வி, விளக்கமுற்றுத் தோன்றும். 717

8.உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்களைத் தாமே தெரிந்தறியும் அறிவுடையார் முன்பு ஒன்றைச் சொல்லுதல், தானே வளர்வதற்குரிய பயிருள்ள பாத்தியில் நீரினை ஊற்றியது போலாகும்.

தானே வளர்தற்குரிய கல்வி கற்றார் அவைக் கண் சொல்லுவதால் மேலும் சிறந்து வளரும் என்பது கருத்து. 718

9.புல்லவையுள பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.

நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின் கண் நல்ல பொருளை, உள்ளத்தில் நன்கு பதியுமாறு பேச வல்லவர், அறிவில்லாதவர் கூட்டத்தில் மறந்தும் பேசுதல் கூடாது.