பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

திருக்குறள்



புல்லவை-கல்வி அறிவில்லாதவர் குழுமியுள்ள சபை; பொச்சாந்து-மறந்து; செலச் சொல்லுதல்-மனத்தில் பதியும் படி சொல்லுதல். 719

10.அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.

அறிவாலே தம் இனத்தவர் அல்லாதவர் சபையில் அறிவுடையார் ஒரு பொருள் பற்றிப் பேசுதல் தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிர்தம் போன்றது.

அங்ஙணம்-தூய்மையில்லாத முற்றம், சேறு நிறைந்த இடம், கழிவு நீர் செல்லும் வாய்க்கால் என்றும் கூறலாம்; உக்க- சிந்திய; அமிழ்து-பால், தேவாமிர்தம்; தம் கணம்-தம் இனத்தவர்; கோட்டி கொளல்-கூட்டத்தில் கலந்து பேசுதல். 720

73. அவையஞ்சாமை


1.வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.

சொல்லைத் தொகுத்துரைக்கும் முறையினை அறிந்த தூய்மை உள்ளம் வாய்ந்தவர்கள், கற்று வல்லோர் அவை, கல்லாதவர் அவை என்னும் அவையின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் பேசும் போது அச்சங் காரணமாக வாய் தவறிப் பிழைபடப் பேச மாட்டார்.

வகை அறிதல்-கல்வியறிவுடையோர் கூடியுள்ள சபை அல்லது கல்வி அறிவு இல்லாதவர் கூடியுள்ள சபை என்பதை அறிந்து கொள்ளும் வல்லமை; வல்லமை-கற்று வல்லவர் கூடியுள்ள சபை; வாய் சோர்தல்-அச்சங் காரணமாகத் தவறான சொற்களைச் சொல்லி விடுதல்; சொல்லின் தொகை -சொற்களின் வகைகள். 721

2.கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

கற்றவரின் முன்பு தாம் கற்றவைகளை அவர் தம் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர் கற்றவர்களுள் கற்றவராக மதிக்கப்படுவார். 722