பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

திருக்குறள்



6.வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலோடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அஞ்சாத நெஞ்சம் படைத்த வீரர்களல்லாத கோழைகட்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? அது போன்றே நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் கூடியுள்ள சபையில் எழுந்து பேச அஞ்சுபவர்களுக்கு, அவர்கள் கற்ற நூலோடு என்ன தொடர்பு உண்டு?

நூலறிவு இருந்தும் அவைக்கு அஞ்சுதலின் அந்த அறிவு பயனற்றது ஆகின்றது. வன் கண்ணர்-அஞ்சாத நெஞ்சம் படைத்த வீரர்; நுண்ணவை-நுண்ணறிவு வாய்ந்த அறிஞர்கள் குழுமியுள்ள சபை. 726

7.பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

அவையின் கண் சென்று பேச அஞ்சுபவன் கற்ற நூல், பகைவரின் போர்க் களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளுக்குச் சமமே ஆகும்.

பகையகம்-போர்க்களம்; பேடி-பகைவனை எதிர்த்துப் போர் புரிய அஞ்சும் கோழை, பெண்ணியல்பு மிகுந்த ஆடவன்; ஒள்வாள்-கூர்மை தங்கிய வாளாயுதம். 727

8.பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்குசெலச் சொல்லா தார்.

நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின் கண் சிறந்த பொருள்களை அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும்படி சொல்ல இயலாதவர், பல அரிய நூல்களைக் கற்றாராயினும் உலகுக்குப் பயனில்லாதவரே ஆவர். 728

9.கல்லா தவரின் கடைஎன்ற கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்.

பல அரிய நூல்களை நன்றாகக் கற்றறிந்த போதிலும், நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள அவையின் கண் பேச அஞ்சுகின்றவர் ஒன்றும் கல்லாத வரை விடக் கடைப்பட்டவரே ஆவர். 729