பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

195



10.உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சி

கற்ற செலச்சொல்லா தார்.

கற்று வல்லார் அவைக் களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிர் வாழ்ந்துள்ளார் எனினும் இறந்தாரோடு ஒப்பவே மதிக்கப்படுவார். 730

74. நாடு


1.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

குறையாத விளைபொருளும், குணநலஞ்சான்ற அறிஞர்களும், கேடில்லாத செல்வமுடையோரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும்.

தள்ளா விளையுள்-குன்றாத விளையுளைச் செய்யும் உழவர் என்பர் பரிமேலழகர்; மழையில்லாத காலத்திலும் சாவி போகாத நிலம் என்று மணக்குடவர் கூறுவர். 731

2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.

பெரும் பொருள் வளத்தால் பலராலும் விரும்பப்பட்டதாகிக் கேடில்லாமையோடு மிகுதியாக விளைபொருளைத் தருவதே நாடாகும்.

பெட்டக்கதாகி-விரும்பப்படுவதாகி; பெட்பு-விருப்பம்; அருங்கேடு-கெடுதியில்லாமை, அஃதாவது மிக்க மழை, மழையின்மை., எலி, விட்டில், கிளி, பன்றி, யானை, பகைவரால் கொள்ளை போதல் முதலியவற்றால் அழிவின்மை; ஆற்ற-மிகுதியாக. 732


3. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறைஒருங்கு நேர்வது நாடு.

பிற நாட்டு மக்கள் பலப்பல காரணங்களால் ஒருங்கே வந்து குடியேறினாலும், அதனால் நேரத்தக்க பெரிய சுமையையும் தாங்கிக் கொண்டு தன் அரசனுக்குரிய வரிப்பணத்தையும்

குறைவின்றித் தர வல்லதே நாடாகும்.