பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பொருள் செயல் வகை

201



எல்லாரும் எள்ளுவர்-தாய், மனைவி, மக்கள் முதலியோர், அனைவரும் இகழ்வர்; எல்லாரும் செய்வர் சிறப்பு-பகைவர், அயலார் முதலிய அனைவரும் புகழ்வர். சிறப்புச் செய்தல்- புகழ்ந்து பேசுதல், மகிழ்ந்து வரவேற்றல், உபசரித்தல் முதலியன. 752

3.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள் என்று பலராலும் புகழப்படும் அணையாத விளக்கு ஒருவர் செல்ல எண்ணும் இடங்களுக்கெல்லாம் அவரை அழைத்துச் செல்வதோடு, ஆங்காங்கே பகை என்னும் இருள் சூழ்ந்திருப்பினும், அதனை அடியோடு போக்கி விடும்.

பொய்யா விளக்கு-அணையாத விளக்கு; பொருள் என்பது அழியத் தக்கதாக இருப்பினும் தன்னை உடையவரின் எண்ணத்தை முடித்து வைக்கும் இயல்புடையதாக இருப்பதால் அதனைப் 'பொய்யா விளக்கு' என்றார். 753

4.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பொருளைத் தொகுத்தற்குரிய வழியை அறிந்து எவர்க்கும் எத்தகைய துன்பத்தையும் விளைவிக்காமல் தேடிய பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும். 754

5.அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

ஒருவர் பொருள் திரட்டத் தொடங்கும் போது அப்பொருளை ஏழைகளிடமிருந்து பெற நேரினும், தமக்குச் சமமானவரிட மிருந்து பெற நேரினும், அவர்கள் உள்ளம் துன்புறா வண்ணம் அருள் உள்ளத்தோடு அதனை அவர்களிடமிருந்து பெறுதல் வேண்டும். அவர்கள் அப்பொருளை அன்போடு தருகின்றனரா என்று எண்ணிப் பார்த்துப் பெறுதல் வேண்டும். இவ்விதம் வாராத பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கி விட வேண்டும்.

அருள்-தாழ்ந்தோர்மாட்டு உயர்ந்தோர் காட்டும் இரக்க குணம்; அன்பு-சமத்துவமான நிலையிலிருப்போரிட

தி.-14