பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

திருக்குறள்



மிருந்து வெளிப்படும் இன்போடு கூடிய உள்ள நெகிழ்ச்சி; புல்லுதல்-பொருந்துதல், தங்குதல்; புரளவிடல்-நீக்கி விடுக, போக விடுக. 755

6.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

இயல்பாகக் குடிமக்கள் வரியாகச் செலுத்தும் பொருளும், சுங்கப் பொருளும், தன் பகைவரிடமிருந்து திறையாகக் கொள்ளும் பொருளும் ஆகிய இவை அரசனுக்குரிய பொருள்களாகும்.

உறுபொருள்-குடிமக்கள் நிலவரியாக ஆறில் ஒரு பங்கு தரும் பொருள். தொகுத்து வைத்தார் இல்லாமற் போக, நெடுங்காலம் நிலத்தின் கண் இருந்து பின் கண்டெடுத்த பொருள்; சந்ததி அற்றுப் போக அரசனிடம் வந்து சேர்ந்த பொருள் என்றும் கூறுவர். உல்கு பொருள்-சுங்கப் பொருள், சுங்கப் பொருளாவது, நிலம் மூலமாகவும். நீரின் மூலமாகவும், ஒரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குச் செல்லும் பொருளுக்கு அரசன் தீர்வையாகப் பெறும் பொருள்: ஒன்னார்- பகைவர்; தெறு பொருள்-திறைப் பொருள்: திறை-கப்பங் கட்டுதல். 756

7.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

அன்பென்னும் தாயால் பெற்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை பொருட்செல்வமாகிய செவிலித் தாயால் வளரும்.

அருள்-எத்தகைய தொடர்பும் கருதாமல் யாவரிடத்தும் தோன்றத் தக்க இரக்க குணம்; இது தொடர்பு பற்றி வரும் அன்பின் முதிர்ச்சியால் உண்டாவது. ஆதலால், அன்பாகிய தாயிடமிருந்து பிறந்த குழந்தை என்றும், இந்த அருட்குணம் வளர்வதற்குப் பொருள் இன்றியமையாததாக இருப்பதால், பொருளைச் 'செல்வச் செவிலி’ என்றும் கூறினர்; செவிலி- வளர்ப்புத் தாய். 757

8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.