பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

திருக்குறள்



எத்தகைய இடையூறுகட்கும் அஞ்சாததாய் நின்று, பகையை வெல்லத் தக்க படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாகும்.

உறுப்பு-அங்கம்; இங்கே இச்சொல் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் பகுதிகளையும் குறிக்கும். ஊறு- துன்பம், இடையூறு; வெறுக்கை-செல்வம். 761

2.உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.

படைபலம் குறைந்து அரசனுக்குப் போரின் கண் துன்பம் நேர்ந்த போது தான் அழிந்து, சிறிதாயிருந்தாலும் எத்தகைய இடையூறுகளுக்கும் அஞ்சாது போர் புரியும் உள்ளத் துணிவு, பரம்பரை பரம்பரையாகப் படைக்கலப் பயிற்சி புரிந்து வரும் மூலப் படைகளுக்கு அல்லாது மற்றப் படைகளுக்கு இல்லை. உலைவு - துன்பம், கேடு; ஊறு- இடையூறு; வன்கண்-அஞ்சா நெஞ்சமுடைமை; தொலைவிடம்-படைகள் அழிந்து குறைவாக உள்ள நிலை; தொல்படை-வழி வழியாகப் போர்த் தொழில் பயிற்சி பெற்று வந்த பெருமை வாய்ந்த மூலப்படை.

மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படைகளுள்ளும் மூலப்படையே சிறப்புடையது. 762

3.ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

எலியாகிய பகை திரண்டு கடல் போல் ஒலித்தாலும், நாகப் பாம்புக்கு என்ன நேரிடும்? அந்நாகம் மூச்சு விட்ட அளவில், அந்த எலிக்கூட்டம் அழிந்தொழியும்.

அது போலப் பெரும் படையாயினும், வலிமையற்றதாயின் ஆண்மையுடைய ஒருவன் வீரத்துக்கு ஆற்றாது. அஃது அழிந்தொழியும்.

ஒலித்தல்-கூச்சலிடல்; உவரி-கடல்; நாகம்-நல்ல பாம்பு என்னும் கொடிய விடமுள்ள பாம்பு; உயிர்த்தல்-மூச்சு விடுதல். அளவினால் பயனில்லை; படைக்கு ஆண்மையே சிறந்தது என்பது கருத்து. 763