பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைமாட்சி

205



4.அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

போரின்கண் எளிதில் வென்று அழிக்க முடியாததாய்ப் பகைவராலும் சூழ்ச்சி செய்து ஒழிக்கப்படாததாய் வழிவழி வந்த அஞ்சாமையுடையதே படை.

அறைபோகுதல்-பகைவர் தம் சூழ்ச்சியால் நிலை குலையச் செய்தல்; வழிவந்த வன்கண்மை-பரம்பரை பரம்பரையாக வரும் ஆண்மைத் தன்மை. 764

5.கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

எமனே கோபங்கொண்டு தன் மேல் எதிர்த்து வரினும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் வல்லமை உடையதே படையாகும் 765

6.மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

வீரம், மானம், புகழ் பெற்ற முன்னோர் வழி வந்த நன்னடத்தை, தம் தலைவரால் நம்பித் தெளியப் பெற்ற தன்மை ஆகிய நான்கு குணங்களும் படைக்குப் பாதுகாப்பாகும்.

மறம்-வீரம்; மானம்-இழிவு நேர்ந்த போது உயிர் வாழ எண்ணாத தன்மை; மாண்ட-மாட்சிமைப்பட்ட; வழிச்செலவு- பாரம்பரியமாக வரும் குணம்; தேற்றம்-தெளிவு, நம்பிக்கை; ஏமம்-பாதுகாப்பு. 766

7.தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.

தன்னை எதிர்த்து வரும் படையை எதிர்த்து வெல்லும் தன்மையை அறிந்து, பகைவனுடைய தூசிப் படையை எதிர்த்துச் செல்வதே படையாகும்.

தார்-முன்னே கொடி தாங்கிச் செல்லும் படை, அதாவது தூசிப் படை; தானை-சேனை; தலை வருதல்-முன் வருதல்; போர் தாங்கும் தன்மை-இன்ன வகைப் படை வகுப்போடு தன்னை எதிர்த்து வரும் படையை இன்ன வகையால் எதிர்த்து வெல்ல வேண்டும் என்னும் தன்மை. 767