பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைச் செருக்கு

209



எண் திசையும் பரந்து நிற்கும் புகழை விரும்பி உயிரை விரும்பாத வீரர் தம் காலில் வீரகண்டையை அணிந்து கொள்வது அவருக்கு அழகு செய்யும் தன்மையுடையதாகும். (அவர்களைத் தவிர ஏனையோர் கழலணிதல் அழகுடையதன்று.)

கமலும்-உலக முழுதும் சூழ்ந்திருக்கும்; இசை-புகழ்; வேண்டா உயிரார்-உயிரை வேண்டாத வீரர்; கழல்-வீரகண்டை; யாப்பு- அணிந்து கொள்ளுதல்; காரிகை-அழகு; நீர்த்து-தன்மை யுடையது. 777

8.உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.

போர் நேர்ந்தால் தம் உயிரின் பொருட்டு அஞ்சாது, போர் புரியத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தாம் போர் புரியும் சிறப்பில் சிறிதும் குன்றாதவர் ஆவர்.

உறின்-நேரின்; உறுதல்-தேர்தல் அல்லது தங்குதல்; மறவர்- வீரர்; செறினும்-சினந்தாலும்; சீர்-தம் இயல்பான போர் புரியும் தன்மை. 778

9.இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

போர் நிகழ்வதற்கு முன்னர்த் தாம் கூறிய சூளுரை தவறாதபடி போர் புரிந்து உயிர் துறக்க வல்ல வீரரை அவர் தம் சூளுரை தவறியதை எடுத்துக் காட்டிப் பழித்துரைக்க வல்லவர் யாவர்? (அத்தகையோர் புகழ்தற்கே உரியர் என்பது கருத்து. )

இழைத்தது-சூளுரைத்தது; 'யான் இன்னது செய்யேனாயின் இன்னவர் ஆகுக’ எனச் சபதங் கூறுதலைச் சூளுரை அல்லது வஞ்சினம் என்பர். இகவாமை-தப்பாமை; பிழைத்தல்-தவறு இழைத்தல்; ஒறுக்கிற்பவர்-தண்டிப்பவர். 779

10.புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

தமக்குச் செய்த நன்றிகளை நினைத்துத் தம்மைக் காத்த தலைவரின் கண்கள் நீர் பெருகுமாறு சாகப் பெற்றால், அத்தகைய சாவு இரந்தும் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமையுடையதாகும்.