பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

திருக்குறள்



அழிவினவை-கேட்டினைத் தரும் தீயநெறிகள்' அழிவின் + நவை என்று பிரித்து அழிவைத் தரும் குற்றங்கள் என்றும் கூறலாம்; ஆறு-நல்வழி; அல்லல்-துன்பம்: உழத்தல்- வருந்துதல். 787

8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடுத்திருந்த ஆடை ஒருவன் உடம்பினின்று நெகிழ்ந்த போது அவன் கை உடனே விரைந்து அந்த நெகிழ்ந்த ஆடையைத் தாங்கிக் கொள்வது போன்று நண்பனுக்குத் துன்பம் நேர்ந்தால், அப்போதே சென்று அந்தத் துன்பத்தைப் போக்குவதே நட்பாகும். 788

9.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்பினுக்குச் சிறந்த நிலை எது என்றால், எக்காலத்தும் மாறுபாடில்லாமல் இயலும் வழிகளிலெல்லாம் உதவி செய்து தாங்கும் உறுதி வாய்ந்த நிலை ஆகும்.

வீற்றிருக்கை-சிறப்பாகத் தங்கியிருக்கும நிலை; கொட்பு- திரிபு, தளர்ச்சி, நிலையின்மை. 789

10.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர் எமக்கு இத்துணை அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மை யுடையோம் என்று ஒருவரை ஒருவர் சிறப்பித்துப் பேசிக் கொண்டாலும், நட்பானது சிறுமைப் பட்டதாகத் தோன்றும். 790


80. நட்பாராய்தல்


1.நாடாது கட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

நட்புச் செய்யும் குணமுடையவர்க்கு ஒருவரோடு நட்புச் செய்த பின், அந்த நண்பனை விடுதல் முடியாது. ஆதலால், ஆராயாது நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறில்லை.

வீடுஇல்லை-விடுதலை இல்லை. 791