பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

திருக்குறள்



6.கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

ஒருவனுக்குக் கேடு வந்த காலத்தும் அதனால் அவனுக்கு ஒரு வகை நன்மையுண்டு. அந்தக் கேடு அவன் நண்பர்களின் குணநலன்களைச் செவ்வையாக அளந்து பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு ஓர் அளவுகோலாகப் பயன்படும்.

கேடாகிய அளவுகோல் நண்பர்களின் உள்ளங்களை ஆய்ந்து அறிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதால் கேடும் ஒருவனுக்கு ஒருவகையில் நன்மையே தருகின்றது என்று வள்ளுவர் கூறுகின்றார். 796

7.ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

அறிவில்லாதவர்களுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கியிருப்பது ஒருவனுக்கு இலாபமான செயல் என்றே சொல்லுதல் வேண்டும்.

ஊதியம்-இலாபம்; பேதை-அறிவில்லாதவன்; கேண்மை-நட்பு. 797

8.உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கம் குறைதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருத்தல் வேண்டும்; அது போலத் தனக்குத் துன்பம் வருங் காலத்துத் தனக்குத் துணையாக இராமல் தன்னைக் கை விடுவார் நட்பினையும் கொள்ளாதொழிக.

உள்ளம் சிறுகுவ-ஊக்கம் குறைவதற்குக் காரணமாக உள்ள செயல்கள்; ஆற்றறுத்தல்-கை விடுதல். 798

9.கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.

ஒருவனுக்குக் கேடுவருங் காலத்து அவனை விட்டு நீங்குவாரது நட்பானது அவன் தான் இறக்கும் போது அதை எண்ணிப் பார்த்தாலும், அவன் உள்ளத்தைச் சுடும்.

கை விடுதல்-விட்டு நீங்குதல்; அடுங்காலை-இறக்கும் போது; அடுதல்-சுடுதல்; எமனால் கொல்லப்படுதல். 799