பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

திருக்குறள்



85. புல்லறிவாண்மை


1.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.

ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இயலாமையாவது அறிவில்லாமையே ஆகும். மற்றைப் பொருள் இல்லாமையோ என்றால் அதனை இல்லாமையாக அறிவுடையோர் கொள்ள மாட்டார்கள்.

இன்மை - இல்லாமை, வறுமை; உலகு - உலகத்தில் உள்ள அறிவிற் சிறந்த மக்கள்; புல்லறிவு - சிற்றறிவு, அற்ப அறிவு ; ஆண்மை - ஆளும் தன்மை. 841

2.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.

அறிவில்லாதவன் உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தல் என்ன காரணம் பற்றியோ எனில், அஃது அந்தப் பொருளைப் பெறுகின்றவன் செய்த நல்வினையின் பயனே ஆகும்; வேறொன்றுமில்லை.

தவம்-முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் செய்த நல்ல செயல்கள், நல்வினை. 842

3.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

அறிவில்லாதவர் என்று சொல்லத்தக்க புல்லறிவாளர் தாமே வருந்திக் கொள்ளும் வருத்தத்தை அவர் தம் பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது.

பீழித்தல்-துன்புறுத்தல்; பீழை-துன்பம்; செறுவார்-பகைவர். 843

4.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையோம்’ என்று ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் அகந்தையே ஆகும்.

வெண்மை-புல்லறிவு, அறிவின்மை; ஒண்மை-அறிவுடைமை; செருக்கு-அகந்தை, கர்வம். 844