பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புல்லறிவாண்மை

227



5.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றதாகக் காட்டிக் கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றதாகிய ஒரு நூல் இருப்பின், அந்த நூலையும் 'அவர் கற்றிருப்பாரோ?’ என்றே பலரும் ஐயங்கொள்ள இடம் தரும்.

கற்றறியாத நூல்களையும் கற்றிருப்பதாகக் காட்டிக் கொள்ளுவதும் புல்லறிவாகும் என்பது கருத்து. 845

6.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை உணர்ந்து அதைப் போக்காமல் தம்மிடமுள்ள மறைக்க வேண்டிய உறுப்புக்களை மட்டும் மறைத்துக் கொள்ள எண்ணுவதும் புல்லறிவே ஆகும்.

அற்றம்-மறைக்கத் தக்கது; தம் வயின்-தம்மிடம். 846

7.அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

பிறருக்குத் தெரிவிக்கக் கூடாத அரிய இரகசியங்களையும் வெளிப்படுத்தி விடும் புல்லறிவாளன் தனக்குத் தானே பெரிய துன்பத்தினைத் தேடிக் கொள்வான்.

அருமறை-அரிய இரகசியங்கள் அல்லது பிறருக்குத் தெரிவிக்கக் கூடாதவைகள்; சோர்தல்-கை நழுவ விடல், வெளியிடல்; மிறை-துன்பம். 847

8.ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.

பிறர் செய்யச் சொல்லியும் செய்யாதவனாய்த் தானே எண்ணிப் பார்த்து அறிந்து கொள்ளவும் இல்லாதவனாய் உள்ள ஒருவன், இவ்வுலகத்தை விட்டு ஒழிந்து போகும் அளவும் இவ்வுலகத்துக்கு ஒரு பெரிய நோய் போன்றவன் ஆவான்.

ஏவுதல்-செய்யும்படி கட்டளையிடுதல்; தேறான்-தெளியாதவன்; அவ்வுயிர்-அந்த மனிதன், எதற்கும் பயன்படாமல் நெட்டுயிர்ப்போடு உலவி வருதலால் 'அவன்'