பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

திருக்குறள்



10.கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.

அரசியல் அறிவு இல்லாதவனோடு பகைக்க நேர்ந்த போது அவனிடமிருந்து பெறத்தக்க சிறிய பொருளையும் கைக்கொள்ள மாட்டாதவனைப் புகழ் எந்தக் காலத்திலும் வந்து பொருந்தாது.

'கல்லான்’ என்பதற்கு அரசியல் அறிவு இல்லாதவன், நீதிநூல் அறிவு இல்லாதவன், பொது அறிவு இல்லாதவன் என்றெல்லாம் பொருள் கொள்வர். ஒல்லானை-இயலாதவனை; ஒல்லாது-வந்து பொருந்தாது; ஒளி-புகழ். 870

88. பகைத்திறம் தெரிதல்


1.பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பகை என்று சொல்லப்படுகின்ற தீய குணத்தை ஒருவன் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது.

பண்புஇல் அதனை-நற்குணம் இல்லாததை, அஃதாவது தீய குணத்தை; நகை-விளையாட்டு.

பகைத்திறம் தெரிதல்-பகையினுடைய தன்மைகளை ஆராய்ந்து அறிதல். 871

2.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

ஒருவன் வில்லை ஏராக உடைய உழவர்களாகிய வீரர்களுடன் பகை கொண்டான் ஆயினும், சொல்லை ஏராக உடைய உழவர்களாகிய அறிஞர்களுடன் பகை கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.

வில்லேர் உழவர்-விற் பயிற்சியில் வல்ல வீரர்; சொல்லேர் உழவர்-நூல் பயிற்சியுடைய புலவர், அமைச்சர் முதலிய அறிஞர்.

அரசரோடு பகை கொள்ளினும் அமைச்சர், புலவர் முதலாயினரோடு பகை கொள்ளலாகாது என்பது கருத்து. 872