பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைத்திறம் தெரிதல்

235



3.ஏமுற்ற வரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

தான் தனியனாக இருந்து பலருடைய பகையையும் தேடிக் கொள்பவன் பித்துப் பிடித்தவரைப் பார்க்கிலும் அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

ஏமுறுதல்-பித்துப் பிடித்தல்; ஏழை-அறிவில்லாதவன்; தமியன் - தனியன்; பல்லார்-பலர். 873

4.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பகைவரையும் நண்பராகச் செய்து கொள்ள வல்ல நல்ல தன்மையுள்ள ஒருவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும். 874

5.தன்துணை இன்றால் பகைஇரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்கு உதவி புரியும் துணையோ எனில் இல்லை. தன்னைத் துன்புறுத்தக் காத்திருக்கும் பகையோ இரண்டு. தானோ ஒருவன். இந்நிலையில் அந்தப் பகைகளுள் ஒன்றை அப்போதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்ள வேண்டும். 875

6.தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

ஒருவனைக் குறித்துத் தாம் முன்பு ஆராய்ந்து தெளிந்தாராயினும், தெளிந்திலர் ஆயினும் தாழ்வு வந்தவிடத்து அவனை ஆராய்ந்து நீக்காமலும், சேர்த்துக் கொள்ளாமலும் ஒர் அயலானைப் போல அவனை விட்டு வைக்க வேண்டும்.

தேறுதல்-தெளிதல்; தேறாவிடுதல்-தெளிந்து கொள்ளாமல் இருத்தல்; அழிவு-தாழ்வு; பகாஅன் விடல்-நீக்காது விட்டு வைத்தல்; பகுதல்-நீக்குதல். 876

7.நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

தாம் வருந்தியதைத் தாமாக அறியாத ஒருவருக்கு அந்தத் துன்ப நிகழ்ச்சியைச் சொல்லக் கூடாது. அது போலப் பகைவரிடத்துத் தமது வலிமைக் குறைவை வெளிப் படுத்தலாகாது.