பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

திருக்குறள்



நோவற்க-நொந்ததைச் சொல்லற்க; மேவற்க-மேலிட்டுக் கொள்ளற்க, வெளிப்படுத்தற்க; மென்மை-மெலிவாக இருக்கும் தன்மை, வலிவற்ற தன்மை. 877

8.வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

ஒருவன் தான் செய்ய வேண்டிய வகையை அறிந்து, அதற்கு வேண்டிய பொருள்களையும் பெருக்கிக் கொண்டு தன்னையும் காத்துக் கொள்வானானால் அவன் பகைவரிடத்துள்ள செருக்கு தானாகவே அழியும்.

வகை அறிதல்-பகைவனை எதிர்த்தற்கு வேண்டிய வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்; தன் செய்தல்-தனக்கு வேண்டிய பொருள்; ஆயுதம் முதலியவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல்; தன் காத்தல்-தன்னைக் காத்துக் கொள்ளுதற்கு வேண்டிய அரண்களை அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளுதல்; மாயும்-அழியும்; செருக்கு-பெருமிதம். 878

9.இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள்ளையுடைய மரத்தை அது சிறியதாக இருக்கும் போதே, களைந்து எறிதல் வேண்டும்; அது முதிர்ந்த போது தன்னை வெட்டுகிறவர்களின் கையையே வருத்தும்.

பகை சிறிதாக இருக்கும் போதே அதனை அழித்தொழிக்க வேண்டும். அதனை வளர விட்டால் தன்னையே அழித்து விடும் என்பது கருத்து. 879

10.உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

தம்மைப் பகைப்பவரது தருக்கினைக் கெடுக்க முடியாதவர் அந்தப் பகைவர் மூச்சு விடும் அளவு கூட உயிரோடு வாழ்கின்றவர் அல்லர், இது நிச்சயம்.

உயிர்த்தல்-மூச்சு விடுதல்; மன்ற-நிச்சயமாக, உறுதியாக; செயிர்ப்பவர்-பகைப்பவர்; செம்மல்-தலைமைப் பதவி; சிதைத்தல்-அழித்தல். 880