பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உட்பகை

237



89. உட்பகை


1.நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

அனுபவிக்க வேண்டுவன ஆகிய நிழலும் நீரும் ஒருவருக்கு முதலிய இன்பம் தருவனவாய்த் தோன்றிப்பின் தீங்கினை விளைவிப்பனவாயின் அவை தீயனவே ஆகும்.அது போலச் சுற்றத்தார் இயல்புகளும் முன்பு இனியனவாய்த் தோன்றிப் பின் தீங்கு விளைவிப்பனவாயின், அவை துன்பம் தருவனவே ஆகும்.

நீரும் நிழலும் நல்லனவாகவே இருக்கலாம். ஆனால் உடம்புக்கு அவை ஏற்றுக் கொள்ளா விட்டால் அந்தக் குளிர்ந்த நீரையும் நிழலையும் ஒதுக்கியே வைக்கிறார்கள். அது போல இன்றியமையாத சுற்றத்தார் போல் காணப்பட்டாலும், அவர் தன்மைகள் தீங்கு விளைவிப்பனவாக இருந்தால், அவரைப் பகைவர் போன்று நீக்கி வைக்கவே வேண்டும்.

'நிழல் நீர்'என்பதற்கு சூரிய வெளிச்சம் படாத மர நிழலில் உள்ள நீர் என்று பொருள் கொள்வர். இன்னாத-துன்பந் தருவன; தமர் ற்றத்தார்; நீர்-தன்மை; தமர் நீர் - சுற்றத்தாரின் இயல்புகள்.

உட்பகை-அருகே இருந்து கொண்டே தீங்கு விளைவிக்கும் இயல்புடையவன். 881

2.வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் புரியும் இயல்புடைய பகைவரைக் குறித்து ஒருவன் அஞ்ச வேண்டுவதில்லை. ஆனால், உறவினரைப் போலத் தன்னோடு இருந்து கொண்டே தனக்குத் தீங்கு புரியும் உட்பகைவரின் தொடர்புக்கு ஒருவன் அஞ்சுதல் வேண்டும்.

கேள்-சுற்றம்; தொடர்பு-நெருங்கியிருக்கும் தன்மை. வெளிப்படையான பகைவரைக் கண்டு ஒருவன் முன்னதாகவே எச்சரிக்கையாக இருத்தல் கூடும். ஆதலால், அந்தப் பகையைக் குறித்து அவன் அஞ்ச வேண்டுவது இல்லை.