பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

திருக்குறள்



10.உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறந் தற்று.

உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவரோடு கூடி, ஒருவன் வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடி வாழ்ந்தாற் போன்றதே ஆகும்.

.உடம்பாடு-மனப் பொருத்தம்; குடங்கர்-குடிசை; உடன் உறைதல்-ஒன்று சேர்ந்து இருத்தல்; அற்று-அத்தன்மைத்து. 890

90. பெரியாரைப் பிழையாமை


1.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

எடுத்துக் கொண்ட செயல்களை முடிக்க வல்லவர் தம் திறமையை இகழாதிருத்தல், தமக்குத் தீங்கு நேராமல் காத்துக் கொள்பவர்கள் செய்யும் காவல் எல்லாவற்றிலும் முதன்மையானது.

பெரியாரைப் பிழையாமை-அறிவு ஆற்றல்களால் சிறந்த பெரியோர்களை இகழாதிருத்தல்; ஆற்றுவார்-எடுத்த செயலைச் செய்து முடிக்க வல்லவர்; ஆற்றல்-வல்லமை; போற்றுவார்-காப்பாற்றிக் கொள்ள முயலுவார்; போற்றல்-காத்தல். 891

2.பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

ஆற்றல் மிகுந்த பெரியோர்களை ஒருவன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவானானால், அஃது அந்தப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். 892

3.கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

தான் கெட விரும்பினால் ஒருவன் பெரியோர்களைக் கேளாமலேயே, ஒரு செயலைக் செய்வானாக; தன்னைக் கொலை செய்து கொள்ள ஒருவன் விரும்புவானானால், அவன் வலிமையுடையாரிடம் தவறு செய்வானாக.