பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

திருக்குறள்



இம்மை இன்பத்தை மனைவியிடம் அடைவதற்காக மறுமைக்கு வேண்டிய அறங்களைச் செய்யாமல் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் ஒருவனை மறுமை இலாளன் என்றார் வள்ளுவர்.

மறுமையிலாளன்-மறுமைப் பயனை அடைய மாட்டாதவன்; வினை ஆண்மை-செயலாற்றும் வல்லமை; வீறு-புகழ், பெருமை; இன்று-இல்லை. 904

5.இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்குப் பயந்து வாழ்கின்றவன் நல்லவர்கட்கு ஒரு நல்ல செயலைச் செய்யவும் எப்போதும் அஞ்சுவான். 905

6.இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

தன் மனைவியின் மூங்கில் போன்ற அழகிய தோளின் மீது கொண்டுள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சி நடக்கும் ஒருவர், இவ்வுலகில் தேவரைப் போன்று தேவலோக இன்பத்தில் திளைத்து வாழ்ந்தாலும் அவர் பெருமை இல்லாதவரே ஆவர்.

இமையார்-இமைத்தல் இல்லாதவர், தேவர்; பாடு-பெருமை; அமை-முங்கில். 906

7.பெண்ஏவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

நாணம் இல்லாமல் தன் மனைவியின் கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஓர் ஆண்மகனை விட நாணம் மிகுந்த பெண்ணே பெருமையுடையவள்.

ஆண்மை என்பதற்கு ஆளுந் தன்மை என்றும், 'பெண்மை' என்பதற்கு அமைதித் தன்மை என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறியிருத்தல் நோக்கத்தக்கது. 907

8.நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

தாம் விரும்பியவாறு நடவாமல் தன் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க நடப்பவர், தம் நண்பருடைய வேண்டுகோளைச் செய்து முடிக்க மாட்டார்; நல்ல அறச் செயலையும் செய்ய மாட்டார்.