பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

திருக்குறள்



10.கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

கள்ளுண்பான் ஒருவன் தான் கள்ளுண்ணாத போது கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் பிறனொருவனைக் காணும் போது கள்ளுண்டு மயங்குவதனால் அடையும் இழிந்த நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும்; (அந்த இழிந்த நிலையை நினைப்பானாயின் அவன் கள்ளுண்டலைக் கை விடுவான் என்பது கருத்து.)

கொல்-ஐயப்பாட்டினைக் குறிக்க வந்த இடைச் சொல். 930

94. சூது


1.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

ஒருவன் சூதாட்டத்தில் வெல்லும் திறமையுடையவனாக இருந்தாலும், அவன் சூதாடுதலை விரும்புதல் கூடாது. சூதாட்டத்தில் வென்ற பொருளும் இரை வைத்து மறைந்த துாண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றதே ஆகும்.

தூண்டில்-மீன் பிடிக்கும் கருவி; பொன்-இரும்பு; ஒரு முறை சூதாடி வென்றவன் மீண்டும் மீண்டும் சூதாடுவதால் தன் கைப்பொருளை இழந்து வருந்துவதற்குத் துாண்டில் இரும்பை விழுங்கிய மீன் அழிந்து போவதை உவமையாகக் கூறினார்.

இரும்பில் உள்ள புழுவை விரும்பி விழுங்கிய மீனானது முடிவில் தன் உயிரையே மாய்த்துக் கொள்வது போன்று முதலில் வந்த சிறு பொருளை எண்ணிச் சூதாடுபவன் முடிவில் தன் கையில் உள்ள எல்லாப் பொருள்களையும் இழந்து விடுகின்றான் என்பது இக்குறளின் பொருளாகும். 931

2.ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.