பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருந்து

255



10.இழந்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.

பொருளை இழக்குந்தோறும் மேலும் மேலும் ஆடத் தூண்டும் சூதே போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த, உயிர் அந்த உடம்பின் மீது ஆசையை உடையதாகிறது.

இழத்தொறூஉம்-இழக்குந்தோறும்; காதலித்தல் விரும்புதல்; உழத்தொறூஉம்-வருந்த வருந்த; காதற்று-காதலை உடையதாக இருக்கிறது. 940

95. மருந்து


1.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

மருத்துவ நூலோர் வாதம், பித்தம், சிலேத்துமம் என வகுத்துச் சொல்லும் மூன்றும் உடம்புக்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.

நூலோர்-மருத்துவம் வல்ல நூலாசிரியர்கள்; வளி முதலா எண்ணிய மூன்று-வாதம், பித்தமம், சிலேத்துமம் என வகுத்துச் சொல்லிய மூன்று; வளி-வாதம், வாயு; சிலேத்துமம்- கபம். 941

2.மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஒருவன் தான் முன்பு உட்கொண்ட உணவு நன்றாகச் செரித்த தன்மையை ஆராய்ந்து அறிந்து பின்பு உண்டால், அவன் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

யாக்கை-உடம்பு; அருந்தியது அற்றது முன்பு உட்கொண்ட உணவு செரித்தது;; போற்றுதல்-தெளிய அறிதல், ஆராய்ந்து அறிதல். 942

3.அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

முன்பு உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வயிறு செரித்துக் கொள்ளும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்விதம் செய்தலே உடம்பைப் பெற்றவன் அதனை நெடுங்காலம் நிலைத்து நிற்கும் படி செலுத்தும் வழி ஆகும்.