பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருந்து

257



தீ அளவு-உணவு செரித்தற்கு ஒருவன் வயிற்றில் தங்கி யிருக்கும் சூட்டின் அளவு; படும்-ஏற்படும்; செரிக்கும் அளவறிந்து உண்ணுதல் வேண்டும் என்பதாம். 947

8.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னது என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்நோய்க்கு முதற் காரணம் இன்னது என்பதையும் ஆராய்ந்து அறிந்து அந்நோயினை தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து உணர்ந்து, அவரவர் உடம்பின் தன்மைக்கும், கால நிலையின் தன்மைக்கும் ஏற்ற வண்ணம் மருத்துவம் செய்தல் வேண்டும்.

நாடுதல்-ஆராய்ந்து அறிதல்; முதல் நாடி-முதற் காரணத்தை ஆராய்ந்து அறிந்து; தணித்தல்-ஆற்றல், தீர்த்தல்; வாய்-வழி; வாய்ப்ப-பொருந்த. 948

9.உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

நோயாளியின் உடல் நிலை, வயது முதலியவைகளின் அளவையும், அவனுக்கு நேர்ந்துள்ள நோயின் அளவையும், அந்நோயைத் தீர்த்தற்கு ஏற்ற காலத்தையும் நன்றாகத் தன் உள்ளத்தில் எண்ணிப் பார்த்துக் கற்றறிருந்த மருத்துவன் மருத்துவம் புரிதல் வேண்டும்.

உற்றான்-நோய் உற்றவன், நோயாளி; கற்றான்-கற்று வல்ல மருத்துவன்; கருதுதல்-எண்ணிப் பார்த்தல். 949

10.உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று
அப்பால்நால் கூற்றே மருந்து.

நோய் உற்றவன், நோயைத் தீர்ப்பவன், நோய்க்குத் தக்க மருந்து, மருந்தை அளவும் காலமும் அறிந்து அருகேயிருந்து தருபவன் என்ற அந்த நான்கு பாகுபாடுகளையும் உடையதே மருத்துவ முறையாகும்.

உற்றவன்-நோயாளன்; தீர்ப்பான்-மருத்துவன்; உழைச் செல்வான்-பிணியாளனுக்கு உடனிருந்து உதவுபவன்; அப்பால் -அந்தப் பகுதி; நால் கூற்று-நான்கு பாகுபாடு. 950