பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

திருக்குறள்


குழலோசையினும் யாழிசையினும் இனிமையுடையன என்பர் தம் குழந்தையின் மழலைச் சொற்களைக் கேளாதவரே குழலோசையும் யாழிசையும் இனியன என்பர். .66

7.தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை ஒன்று உண்டு. அது கற்றவர் கூடிய அவையிலே தன் மகன் மேம்பட்டிருக்கும்படி அவனைக் கல்வி யறிவுடையனாக்குதல். .67

8.தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம் மக்கள், இயல்பாகிய அறிவோடு கல்வியறிவையும் பெற்றிருத்தலைக் கண்டு பெற்றோர் மகிழ்வர். ஆனால்; அவ்வறிவுடைமையை அறிந்து. இந்நிலவுலகத்தில் நிலை பெற்ற கல்வி யறிவுடையார், பெற்றோரினும் பெருமகிழ்ச்சி கொள்வர்.

தம்மில்-தம்மைக் காட்டிலும்; மாநிலம்-பெரிய உலகம்; மன்னுயிர்-நிலைபெற்ற கல்வி யறிவுடையோர். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை-'தம்மினும் தம் மக்கள் அறிவிற் சிறந்து விளங்குதல்’ என்றும் பொருள் கூறுவர். .68

9.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குழந்தையைப் பெறும் போது தாய் அடையும் துன்பம் பெரிது ஆயினும், தான் பெற்ற குழந்தை ஆண் குழந்தை என்பதை அறிந்ததும் அவள் அடையும் மகிழ்ச்சியும் பெரிது. இம்மகிழ்ச்சியிலும் தன் மகன் கல்வி கேள்விகள் நிறைந்தவன் எனச் சான்றோர் சொல்லக் கேட்கும் போது அந்தத் தாயின் மகிழ்ச்சி அளவு கடந்து நிற்கின்றது. .69

10.மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

தன்னைக் கல்வியுடையவனாக்கிய தன் தந்தைக்கு மகன் செய்யும் நன்மை ஒன்று உண்டு; அது தன் அறிவையும், ஒழுக்கத்தையும் கண்டவர். "இவனைப் பெறுதற்கு இவன் தந்தை என்ன நல்வினை செய்தானோ?” என்று சொல்லும்படியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுதலாம். .70