பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாணுடைமை

275



போன்று இருக்கும் என்றால் மழை பெய்து உலகைக் காக்கும் மேகமானது வறண்டு போக மழையைப் பொழியாமல் இருந்தால், உலகத்துக்கு எவ்வளவு துன்பம் உண்டாகுமோ அவ்வளவு துன்பத்தை மக்கள் அனுபவிக்கும் காலமாக இருக்கும்.

சீர்-சிறப்பு , பெருமை; துனி-வெறுப்பு. இங்கே இச்சொல் வெறுக்கத் தக்க வறுமையைக் குறிக்க வந்துளது; மாரி-மழை; மழையைப் பொழியும் மேகத்துக்கு ஆகி வந்தது; வறங்கூர்தல்-மழை பெய்யாது போதல்; வறம்-வற்றுதல்; கூர்தல்-மிகுதல்; அனையது-அத்தகையது. 1010

102. நாணுடைமை


1.கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

செய்யத் தகாத செயல் காரணமாக நாணுவதே நாணம் ஆகும். அஃது அல்லாத பிற நாணங்கள் அழகிய நெற்றியையுடைய பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள நாணத்துக்கே ஒப்பாகும் .

கருமம்-செயல், இங்கே இச்சொல் இழிசெயலைக் குறிக்க வந்துள்ளது. நாணுதல்-நமக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய வெட்கப்படுதல்; திரு-அழகிய; நுதல்-நெற்றி; நல்லவர்-பெண்கள். 1011

2.ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவும் உடையும் அவை போல்வன பிறவும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. மக்களுக்குச் சிறப்பாக இருப்பது நாணமே ஆகும்,

ஊண்-உணவு; எச்சம் (ஊண், உடை ஒழிந்த) மிகுதி; அஃதாவது உறக்கம், அச்சம், ஆசை முதலியன போன்று எஞ்சி நிற்பவை; 'எச்சம்' என்பதற்குப் ப்திலாக 'அச்சம்' என்று பாடங் கொள்வாரும் உளர். 1012

3.ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.