பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

திருக்குறள்


யின் அவர் எவ்வளவு பெருமையுடையவராயினும் என்ன பயன்? (அவர் இழிவானவராகவே கருதப்படுவர்.) 144

5.எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

மிகவும் இலகுவான செயல் என்று எண்ணிப் பிறன் மனைவியிடம் முறைமை தவறி நடக்க முயலுபவன், எக்காலத்திலும் அழியாத பழியை அடைவான்.

இறப்பான்-(நீதி நெறியை) கடப்பவன்; எஞ்ஞான்றும்-எந்தக் காலத்திலும்; விளியாது-அழியாது. 145

6.பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியினிடத்து நீதி முறை தவறி நடந்து கொள்பவனிடம் பகைமை, பாவம், அச்சம், பழி இந்த நான்கு குற்றங்களும் நீங்காமல் இருக்கும். 146

7.அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பிறனுக்கு உரிமையாக உள்ளவளின் பெண்மைக் குணத்தை விரும்பாதவனே, அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கையை நடத்துகிறவன் என்று சிறப்பித்துச் சொல்லுதற்குரியவன் ஆவான்.

அறன் இயல்-இல்லறத்தின் இயல்பு; பிறன் இயலாள்-பிறனுக்கு உரிமையானவள்; பெண்மை-பெண் தன்மை. 147

8.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பிறனுடைய மனைவியை விரும்பி, அவள் மீது தன் கருத்தைச் செலுத்தாத பெரிய ஆண் தன்மை, பல நற் குணங்களும் அமைந்த பெரியோர்களுக்கு அறநெறி மட்டுமன்று சிறந்த ஒழுக்கமுமாகும். 148