பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறையுடைமை

41


6.ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

பிழை செய்த ஒருவனைத் தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் மட்டும் இன்பம் உண்டாகலாம். அவ்விதம் தண்டிக்காமல், அவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணமுடையவர்க்கு இவ்வுலகம் அழியும் வரையிலும் புகழ் நிலைத்து நிற்கும் 156

7.திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.

தகுதியில்லாத செயல்களைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அவருக்கு அதனால் நேரக்கூடிய துன்பத்திற்காக வருந்தி அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது 157

8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

செருக்கினால் தீய செயல்களைப் புரிந்தவர்க்கும் நன்மையே புரிந்து தம்முடைய பெருந்தன்மை என்னும் குணத்தினால் அவரை வென்று விடுதல் வேண்டும்.

மிகுதி-அளவிற்கு மேற்பட்ட செயல்; இங்கே செருக்கு என்னும் குணத்தினைக் குறிக்கும்; மிக்கவை-அளவுக்கு மீறியவை; தகுதி-சிறந்த குணம். 158

9.துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

ஒழுங்கு முறையைக் கடந்து நடப்பவரின் வாயிலிருந்து வரும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்ள வல்லவர் இல்லறத்தில் இருப்பவரேயாயினும், துறந்தாரைப் போல் தூய்மையுடையவராகவே கருதப்படுவர். 159

10.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரிற் பின்.

உணவு கொள்ளுதலை வெறுத்து விரதங்கள் பலப்பல ஆற்றி வாழ்பவர் பெரியாரே எனினும், பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதலை நோன்

தி.-4