பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈகை

59


பெற்றவன் அப்பொருளைப் பிற்காலத்தில் தனக்கு உதவும் படி சேமித்து வைக்கும் சேம நிதிக்குச் சமம். 226

7.பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

தான் பெற்ற உணவைப் பலருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தந்து, உணவு கொள்ளும் பழக்கமுடையவனைப் பசி என்று கூறப்படும் கொடிய நோய் அணுகுதல் அரிது. 227

8.ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் மறைத்து வைத்திருந்து, முடிவில் இழந்து விடும் கன்னெஞ்சம் படைத்தவர்கள் பிறருக்குக் கொடுத்து, அதனால் அடையும் மகிழ்ச்சியினை அறிய மாட்டார்கள் போலும். 228

9.இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

தமக்குள்ள பொருளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காகத் தாமே தனித்தவராக இருந்து, பிறருக்குக் கொடுக்காமல் உணவு கொள்ளுதல் பிச்சை எடுப்பதைப் பார்க்கிலும் துன்பம் தருவதாகும். 229

10.சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

இறப்பதைக் காட்டிலும் துன்பமானது வேறொன்றுமில்லை. எனினும், தம்மிடம் வந்து ஓர் எளியவன் ஒரு பொருளைக் கேட்க, அப்பொருளைத் தம்மால் கொடுக்க முடியாத போது இறத்தலும் இன்பமானதே ஆகும். 230