பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 திருக்குறள்

வெண்பாமுதற்பாவெனப்படும். அப் பாவால் நூல் செய்தமையின் "முதற்பாவலர்" என்பர் திருவள்ளுவரை. "முப்பால் மொழிந்த முதற்பாவலர்” என்பது திருவள்ளுவமாலை 18 ஆம் செய்யுள்.

கவிகளாகிய தேனைச் சொரியும் செந்நாவினர் ஆகையால் "செந்நாப் போதார்" எனப் பெற்றார். "மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார் புனற் கூடற் கச்சு" என்பர் நல்கூர் வேள்வியார் (செ. 21)

தொடித்தலை விழுத்தண்டினார் திருவள்ளுவமாலை (செ. 22 இல்) "நாலும் மொழிந்த பெருநாவலரே நன் குணர்வார்" என்ற விடத்துத் திருவள்ளுவரைப் "பெருநாவலர்" என்றார்.

"புலவர் திருவள்ளுவர் அன்றி" என்ற திருவள்ளுவமாலை 34 ஆம் செய்யுள், திருவள்ளுவர் ஒருவரையே புலவர் எனல் வேண்டும் என்று குறிப்பிடும்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை”

என்புழிச் சீத்தலைச் சாத்தனார் திருவள்ளுவரைப் "பொய்யில் புலவன்" என்றமை காணலாம்.

இங்ஙனம் புகழ்ந்தோதப்பெறும் திருவள்ளுவர் வாய்மொழியாகிய திருக்குறளைக் கற்றாலே போதும்; வேறு நூல்களைக் கற்றல் வேண்டா என்றனர் தமிழ்ப்புலவர்கள். புலவர் திருவள்ளுவரன்றிப் பூ மேல் சிலரைப் புலவர் எனச்செப்புதல் கூடாது எனக் கருதினர்; வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு என்று புகன்றனர்; "எல்லாப் பொருளும் இதன் பால் உள" என மதிப்பீடு செய்தனர்; "வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம் சிந்திக்க, கேட்க செவி" என்று வழுத்தினர்; "சிந்தைக்கு இனிய செவிக்கு இனிய வாய்க் கினிய வந்த