பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை 13

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"

என்று சிறப்பித்துப் பாடினார்*. ஶ்ரீகுந்த குந்தர் திருவுள்ளம் நயினாரின் நுண்ணிய அறிவை யறிந்து, இந்நூலை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்யுமாறு பணித்தார். அங்ஙனமே திருவுள்ளம் நயினார் அரங்கேற்றுவித்தார்.

ஆசார்ய ஶ்ரீகுந்த குந்தர் தம் இறுதிக் காலத்தில் (வந்தவாசிக்கு அருகிலுள்ள) பொன்னூர் மலை (எனப் பெற்ற நீலகிரி) யில் தங்கியிருந்து மேற்படி மலையில் தேகவியோகமடைந்து சர்வார்த்த சித்தி யென்னும் பஞ்சநுத்தரத்தில் அக மிந்திரனாக அவதரித்தார். இவர் பொன்னூர் மலையில் தேக வியோகம் அடைந்ததால் அவருடைய நினைவாக அங்கு இரண்டு திருவடிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இது காறும் கூறிய வாற்றான் திருக்குறளை இயற்றியவர் ஏலாசாரியர் எனப் பெற்ற ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர் என்பதும், அவருடைய மாணாக்கர்களில் ஒருவராகிய திருவுள்ளம் நயினார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியவர் என்பதும் நன்கு தெரிய வரும். திருவுள்ளம் நயினாரே திருவள்ளுவர் என்று அழைக்கப்பட்டார்.

இத்திருக்குறளாகிய நூல், சைன சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்க வெழுந்ததாகும் என்பது சைனரின் கருத்தாகும்.

ஜைன சமயத்தில் கடவுள் வணக்க முறை நான்கு வகையாக அமையும். அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தர்ம சரணம் என்பன அவை. சீவகசிந்தாமணி 382 ஆம் செய். "நல்லறத் திறைவ னாகி நால்வகைச் சரணமெய்தி" என்ற பகுதிக்கு உரை பகுத்த நச்சினார்க்கினியரும் மேற்கண்ட நால்வகைச் சரணங்களைக் குறிப்பிடுகிறார் இந் நான்கையும் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் காணலாம்.


  • இதனைப் பாடியவர் இடைக்காடர் என்று திருவள்ளுவ மாலையில் உள்ளது