பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

17

“வாலறிவன்” என்ற தொடர் குறிப்பிடா நிற்கும்; சிலப்பதிகாரம் (நாடு காண் காதை வரி 176) “அறிவன் அறவோன்” என்றும், மேருமந்தரபுராணம் “அறிவினாலறியாத அறிவன் நீ” என்றும் கூறும் (செ. 630) “அறம் பகர்ந்த அறிவன்” என்பது சீவசம் போதனை (அத்தியாயம் 1, செ. 29).

மூன்றாவது குறள் மலர் மிசை யேகினான் என்ற தொடரை யுடையது. இது அருகக் கடவுள் மலர்மேல் நடந்த செய்தியைக் கூறுவது. அருகக்கடவுள் திருவடியின் கீழமைந்துள்ள தாமரை மலர் தவிரச் சமவசரணத்தின் மிசைச் செல்லும் போது முன்னேழு பின்னேழு தாமரை மலர்கள் தெய்வீக அதிசயத்தில் ஏற்படும்; அதன் மிசை அவர் நடப்பார். “மலர் மிசை நடந்தோன்” (சிலப், நாடு, வரி 204); “விரி பூந்தாமரை மேற் சென்ற திருவாரடி” (சீவக 2814); “கமல மீதுலவும் உனை” (மேரு மந்தர புராணம் செ. 66); “தண் தாமரை மலரின் மேல் நடந்தாய்” (சூளாமணி, துறவு 71): “தாமரைப் பூவின் மேற் சென்றான் புகழ் அடி” (அறநெறிச் சாரம் கடவுள் வாழ்த்து); “தன் தாமரைமேல் நடந்தான்” (நீலகேசி - 33) என்ற மேற்கோள்கள் இதனை வலியுறுத்தும். “போதில் நடந்தோன்” என்பது கயாதரம்.

நான்காவது குறள் வேண்டுதல் வேண்டாமையிலான் என்ற தொடரையுடையது. வேண்டுதல் வேண்டாமை - ராகத்து வேஷங்கள் - விறுப்பு வெறுப்புக்கள் இல்லாதவன் என்பது அருக பரமேஷ்டியைக் குறிக்கும். “வேண்டுதல் வேண்டாமை யில்லாத வீரன்” (திருக்கலம்பகம் 58); “ஆழ்த்துதி ஆர்வமும் செற்றமும் நீக்கிய அச்சுதனே” (திரு நூற்றந்தாதி செ. 20); “உவத்தல் காய்தல் உன் திருவுளத்து ஒன்றும் நீ இலை” (மேரு மந்தர புராணம் 178) ஆகியவற்றால் வேண்டுதல் வேண்டாமை யிலான் அருகன் என்பது விளங்கும்.

ஆறாவது குறளில் கண்ட (பொறி வாயிலைந்து அவித்தான்) என்பது அருகக் கடவுளையே குறிக்கும். இக்கருத்து “ஐவரை வென்றோன்” (சிலப் 10-198) “பொறிவாயில் ஐந்த வித்த புனிதன் நீயே” (சீவசம் போதனை 1-29); “பொறிவரம்பாகிய புண்ணிய முதல்வன்” (சீவக சிந்தாமணி 2563) என்பவற்றால் உறுதியெய்தும்.