பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

திருக்குறள்

— என்பதாகும். இதிற்காணும் ‘அந்தணர் நூல்’ என்பது ஜைந சம்பிரதாயத்தின்படி பகவான் அருளிய பரம ஆகமங்களை. அவற்றை வகைப்படுத்தி நான்கு அனுயோகங்கள் என்பர். அவை 1. பிரதமாதுயோகம்; 2. கரணாது யோகம்: 3. சரணாது யோகம்; 4. திரவியாது யோகம் என்பனவாம். (விரிவிதி. ஆ. பக் 88-89 காண்க) இவற்றை நாடோறும் ஓதுதலை நியமமாகக் கொள்வர் ஜைநர்; இந்நாளில் இவற்றை ஒதுதல் அருகியது என்று தெரிகிறது.

திருக்குறளைப் பின்னிரண்டடிகளில் வைத்து மேற்கோட் செய்திகளை முன்னிரண்டடிகளில் அமைத்துப் பாடிய முதுமொழி வெண்பா நூல்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று முதுமொழி மேல் வைப்பு என்பது. இதன் ஆசிரியர் வெள்ளியம்பல வாண முனிவர் ஆவர்; இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபுர ஆதீன அடியார் கூட்டத்தில் திகழ்ந்த முனிபுங்கவர்களுள் ஒருவர். இவர்தம் நூல் 89 ஆம் பாடலில்,

“அந்திவண்ணன் நூலால் அருகர்பிறர் கோள் சிதைய
வந்த திருவள்ளுவர்தம் வாய்மொழிகேள்-இந்த நிலத்து
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்”

என்பதாம்.

இதில் ‘அந்தணர் நூற்கும்’ என்பது வடமொழி வேதங்களைக் குறிப்பதாகக் கொண்டு பாடினார். ஆனால் அந்தணர் என்போர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரையே குறிப்பதால், இங்கும் அந்தணர் நூல் என்று மேற்படி அந்தணர்கள் ஓதும் நான்கு அநுயோகங்களையே யென்று கொள்ளுதல் பொருந்தும்.

மேலும் முதுமொழி மேல் வைப்பில் (செ. 158).

ஒருவர் செயவேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால்-வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (1062)