பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

திருக்குறள்

காப்பியத்தானும் வேதம் ஓதுதல் அந்தணர்க்குரிய ஒழுக்கமாதல் பெறப்படும். பரத சக்ரவர்த்தியும், ஓரறிவுடைய ஜீவன்களையும் இம்சை செய்யக்கூடாது என்ற கொள்கையுடையாரை அந்தணர் என்று அழைத்தார் என்று மேலே கூறப்பட்டது. ஆகவே அன்னோர்க்கு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் "சிறப்பொழுக்கம் ஆயிற்று. அதுவே அவர்கட்கு எனப் பிறப்பிக்கப்பட்ட ஒழுக்கமுமாயிற்று. யார்யார் ஓரறியுவுர்கட்கும் தீங்கு புரியாத ஒழுக்கம் உடையவர்களோ அவர்களெல்லாம் அந்தணரே யாவர். அவ்வந்தணர்களும் ஜைந வேதங்களை ஓதும் கடப்பாடுடையர். இங்குக் கண்ட பார்ப்பான் - அந்தணன் என்ப வனுக்குரிய ஒழுக்கம் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண் டொழுகுதலாகும். இங்ஙனம் செந்தண்மை பூண்டொழுகுதல் சமயச் சாரித்திரம் என்று ஜைந சமயக் கோட்பாடு குறிப்படும்.

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின்” (560)

எனும் குறளிலும் ‘அறுதொழிலோர்’ குறிக்கப்படுகின்றனர். இவ்வறு தொழிலோரும் அந்தணர் என்ற அறவோரையே குறிக்கும். நூல் என்பதும் ஜைந சமயிகட்குரிய பிரதமாதுயோகம் முதலிய நான்குமாம்.

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (377)

எனும் குறளில், ‘வகுத்தான்’ என்ற சொல் மயக்கம் தருவதாக உள்ளது. ‘வகுத்தான்’ என்பது ஊழ் என்ற அதிகாரத்தில் இருப்பதால் வகுத்தான் என்பது ஊழையே குறிக்கும். ஊழ் என்னும் ஆற்றலையே இங்கு ஒரு தெய்வமாக உருவகித்து வகுத்தான் என ஆண்பால் முடிவாகக் கூறினார் ஆதல் கூடும். வகுத்தான் — கருமங்களை வகுத்தருளியவனாகிய அருகக் கடவுள் என்றும் கூறுவர் (தி.ஆ.பக் ௩உ)

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு” (610)