பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

25

எனும் குறளில், ‘அடியளந்தான்’ என்பது திருமாலைக் குறிக்கும் என்பர். அடியளந்தான் என்பது கேவல ஞானியைக் குறிக்கும். கேவல ஞானி எல்லாவுலகங்களையும் நன்கறியும் ஆற்றல் பெற்றவன். “அடியளந்தான் தாஅயது” என்பது கேவல ஞானியாலே அறியப்பட்ட உலகு என்று பொருள்படும். அது திருமாலைக் குறிக்காது என்பது ஜைநசமயக் கோட்பாடு. அடியளந்தான் என்பதற்குச் “சகலலோகத்தையும் அறிந்த சுவாமி” என்பது இந்நூலிற் கண்ட உரை.

“தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு” (1103)

எனும் குறளில், “தாமரைக் கண்ணான்” என்று திருமாலும் அவனது உலகமாகிய சுவர்க்கமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. தாமரைக் கண்ணானுலகு என்பதை இந்திரன் உலகு என்று குறிப்பிடுவோரு முளர் என்று பரிமேலழகர் கூறித் ‘தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறிக்காது’ என்பர். மணக்குடவரோ ‘இந்திரர் உலகு’ என்பர்.

இந்திரர் வாழும் உலகத்துள்ளவர்கள் ஆங்கு இன்பம் நுகர்ந்து பின் இவ்வுலகத்தில் மனிதனாகப்பிறந்து சம்சாரத்தில் இருந்து, தவம் செய்து மோட்சம் பெறலாம். இந்திரர் உலகத்தவர் அங்கிருந்தே மோட்சத்துக்குச் செல்லவியலாது.

“நீ சுவர்க்கம் பெறுவதற்குரிய முயற்சியைவிட்டு இங்ஙனம் காதல் வயப்பட்டு இருத்தல் உன் பெருமைக்குப் பொருந்தாதது” என்று கூறிய பாங்கனை நோக்கிக் “காதலியின் மென்தோளில் துயிலுதலைக் காட்டிலும் சுவர்க்க வின்பம் பெரிதாகுமோ” என்று தலைவன் கூறியதாக இக்குறள் அமைந்துள்ளது. சுவர்க்க வின்பம் பெரியதன்று. அவ்வின்பம் நுகர்ந்தபிறகு மீண்டும் உலகத்துப் பிறந்து தவம் செய்தே மோட்சம் பெறவியலும். எனவே இங்குக் கூறிய தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறித்ததாகவே கொள்ளலாம்.

இந்திரனுக்கு ஆயிரங்கண் உண்டு என்பதும் ஜைநர் கொள்கை. பகவான் அடைந்த கேவல ஞானப் பேரொளியைக் கண்டு