பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருக்குறள்

‘வான்சிறப்பு’ என்ற அதிகாரம் பற்றியும் இங்குக் குறிப்பிடல் தகும். ஜைந சம்பிரதாயப்படி வான்சிறப்பு என்ற அதிகாரம் நான்காவதாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது. கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருகசரணம் சித்த சரணம் ஆகிய இரண்டும். நீத்தார் பெருமையுள் சாதுசரணமும், அறன் வலியுறுத்தலில் தரும சரணமும் கூறப்பட்டன என்றும் ஜைநசமயச் சான்றோர் கூறுவர். எனவே இம்மூன்றும் முறையே அமைந்த பிறகே வான்சிறப்பு’ என்ற அதிகாரம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிலப்பதிகாரத்திலும் “மாமழை போற்றுதும்” என்று வான் சிறப்புக் கூறப்பட்டது.

இங்ஙனம் மழையின் சிறப்பைக் கூறியவர் உழவர்க்கு இன்றியமையாத மழையினது நன்மையைக் கூறியவர்- ‘உழவு’ என்ற அதிகாரத்தில் உழவனைப்பற்றிக் கூறியவர் - உழவுத் தொழிற்குரிய வேளாளர்களை “உழுவார் உலகத்தார்க்காணி” “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று சிறப்பித்தமையோடு “உழந்தும் உழவே தலை” என்று உழவுத் தொழிலையே சிறந்த தொழில் என்றார்.

ஜைந ஆகமத்தின்படி முன்பு இப்பூமி போக பூமியாக இருந்தது. மக்கள் உழைப்பின்றித் தாம் வேண்டியவற்றை வேண்டியாங்கு கற்பதருமூலம் பெற்று வாழ்ந்தனர். துடுமெனக் கற்பதருக்கள் மறைந்தன. உணவுப் பொருட்கள் இல்லையாயின. ஆகவே விருஷப தேவர் மக்களுட் சிலரை உழுதுபயிரிடுமாறு பணித்தருளினார். இத்தொழில் செய்பவர் வேளாளர் எனப்பட்டனர். பயிரிட்டுப்பெற்ற உணவுப் பொருள்களைப் பலரும் பெறுதற் பொருட்டு வாணிபத் தொழில் நியமித்தார். இத் தொழிலைச் செய்பவர் வணிகர் எனப்பட்டனர். உலகு நன்கு நடைபெறச் சிலரை ஆட்சியாளர் ஆக நியமித்தார். இங்ஙனம் உலகம் கருமபூமி ஆயிற்று. எனவே செய் தொழிலால் மக்கள் மூன்று வகையாயினர். இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. வருணாசிரம தருமத்தின்படி உழுபவர் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர் நான்காவது வருணத்தினர் ஆயினர். பிற்காலத்தில் உழுது உண்பார் உழுவித்துண்பார் என்ற பாகுபாடுகளும் தோற்றம் பெற்றன. ஆனால் குறளின் படி நோக்கின் உழுபவர் உலகத்திற்கு அச்சாணி