பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

39

தாயத்துக்கு ஏற்ப உள்ளது. ஜைநசமயத்துக்கொள்கை அத்தி நாத்தி, சப்தபங்கி, அல்லது பங்கி என்ற பெயர்களால் குறிக்கப்படும். எனவே அநுபங்கி என்பது மேற்கூறிய அத்திநாத்தி அல்லது சப்தபங்கியைக் குறிக்கும். அங்ஙனம் ஆயின் மாதாநுபங்கி என்பது அநுபங்கி அல்லது சப்தபங்கிக்கு உரியவர் எனப்பொருள்படும். மாதாநுபங்கி என்பது எதுகை நோக்கி மாதாநுபங்கி என முதல் நீண்டதாகக் கொள்ளலாம். மேலும் வாதாநுபங்கி என்பதே ஏடெழுது வோரால் மாதாநுபங்கி என்று (வகாரத்துக்கு மகரம்) எழுதப்பட்ட தாதலும் கூடும். அங்ஙனமாயின் குறள் ஆசிரியர் அநுபங்கி வாதத்தைச் சார்ந்தவர் என்று பொருள்படும். எனவே மாதாநுபங்கி என்பது வாதாநுபங்கி என்பதால் கூடும் என்றும், சப்த பங்கி அல்லது அத்தி நாத்தி வாதத்தைக் குறிக்கும் என்றும், செந்நாப்போதார் சப்த பங்கி வாதத்துக்கு உரியவர் என்றும், இதனானே திருக்குறள் ஆசிரியர் ஜைந சமயத்தவர் ஆதல் கூடும் எனவும் அறியப்பெறும்.

கவிராஜ பண்டிதருரையுடன் கூடிய திருக்குறள் நன்கு அறிமுகப்படுத்தப் பெறவில்லை. 1949 இல் இது முதன் முதலில் அச்சிடப் பெற்றது; ஆகலின் தருமபுர ஆதீனத்தில் வெளியிடப் பெற்ற திருக்குறள் உரைவளத்தில் இடம் பெறவில்லை. திருக்குறள் உரைவளம் தயாரித்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தின் வாயிலாக வெளியிட்டுவரும் திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் இவ்வுரை இடம் பெற்றுள்ளது.

கவிராஜ பண்டிதருரை வெளியிட்ட பேரா. அ. சக்கரவர்த்தி அவர்கள் M A, I E S ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துச் சிறந்த விளக்கவுரைகளுடன் 1953 இல் அச்சிட்டு வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் திருக்குறளின் ஜைநச் சார்பைத் திறம்பட விளக்குவனவாய் மிளிர்கின்றன. இப் பேராசிரியர் அரிதில் விளக்கவுரைகளுடன் வெளியிட்ட கவிராஜ பண்டிதருரையும், இவரால் எழுதி வெளியிடப்பட்ட திருக்குறள் மொழி பெயர்ப்பும் இந்நாளில் கிடைத்தற்கரிதா யுள்ளன.