பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

43

(பக்கம் 740 - இல்) எழுதியிருக்கிறது. காகிதக் கையெழுத்துச் சுவடியில் விடுபட்ட உரைப்பகுதிகளும் அந்தக் கவிராஜ பண்டிதருரை கொண்ட அச்சுநூலை நோக்கியே நிறைவு செய்து இந்நூல் வடிவில் அச்செய்துகிறது.

இவ்வுரைக்கு இன்றியமையாத இடங்களில் ஜைனச் சார்பான பகுதிகளுக்குக் குறிப்புகள் தரப் பெற்றுள்ளன. (பிற்சேர்க்கை II காண்க)

இவ்வுரை எளிமையாக வுள்ளது. பேச்சு வழக்குத் தமிழில் அமைந்துள்ளது. இயல் அதிகாரங்களும் குறள் நிரலும் பரிமேலழகர் கொண்டனவேயாகும். ஜைனச் சார்பான

இடங்கள் தவிர்த்துப் பெரும்பாலான இடங்களில் பரிமேலழகருரையை ஒத்துள்ளது. திருக்குறள் காமத்துப்பால் குறள்கட்குத் தந்த குறிப்புப் பரிமேலழகருடையதாகவே உள்ளது. பரிமேலழகருக்கும் கவிராஜ பண்டிதருக்கும் முன்னதாகச் ஜைனச் சார்பான ஓருரை யிருந்திருத்தல் வேண்டும் என்றும் பரிமேலழகர் தமக்கு வேண்டிய இடத்தில் மாற்றியமைத்துக் கொண்டனர் என்றும், இக்கவிராஜபண்டிதருரையாகிய ஜைனச் சார்பானவுரை அப்பழைய உரையை எளிமைப்படுத்தி யெழுதியதாகலாம் என்றும் பேரா. சக்கரவர்த்தி கருதுவர்*.இது பொருந்தாத கூற்றெனவே தோன்றுகிறது. பரிமேலழகர் உரையை நன்கு கற்ற கவிராஜ பண்டிதர் பரிமேலழகருரையை எளிமைப்படுத்தி வேண்டிய அளவு மட்டும் எடுத்துக் கொண்டார் என்றும், ஜைனச் சார்பான முறையில் எழுத வேண்டிய இடங்களில் தம் கருத்தை எளிமையான தமிழில் எழுதினார் என்றும், பிறவிடங்களில் தன் கருத்துக்கேற்ப எளிமையாக எழுதினார் என்றும் கொள்ளலாம். எங்ஙன மாயினும் ஜைனச் சார்பான இவ்வுரை எளிய தமிழில் தரப் பட்டதே என்பது தெளிவு.

இந்தச் சுவடியின் மொழிநிலை பற்றி இங்குச் சில கூறுவது இன்றியமையாததாகும்.


  • அச்சுநூல் - ஆங்கில முன்னுரை - பக்கம் xxxiii