பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

459

தேய்கிறதினாலேயும் வளர்வதனாலேயும் மறு உண்டானதினாலேயும், சந்திரனும் முகத்துக்குச் சரியன்று என்பதாம்.

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேற்

காதலை வாழி மதி

என்பது இதுவுமது

சந்திரனே வாழ்வாயாக! இந்த ஸ்திரீ முகத்தைப் போல் நான் மகிழும்வகை யொளி விட வல்லையாகில், மேன்மேலே என் ஆசை யுடையை யாவாய்.

மறுவுடைமையினாலே, ஸ்திரீகள் முகத்தைப் போலப் பிரகாசிக்க மாட்டாய்; ஆனபடியினாலே காதலிக்கவும் படாய் என்பதாம்.

1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்

பலர்காணத் தோன்றன் மதி

என்பது இதுவுமது.

சந்திரனே! மலர் போலுங் கண்ணை யுடையாளின் முகத்தை யொக்க விரும்பினை யானால், யான் அன்றிப் பலர் காணத் தோன்றா தொழிக என்றவாறு.

முகத்தினுடைய நலமெல்லாந் தானே கண்டு அனுபவித்தானாதலால், பலர் காணத் தோன்றலை இழித்துக் கூறினான்: தோன்றின் நீ அதற்கு ஒவ்வாய் என்பதாம்.

1120. அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத

ரடிக்கு நெருஞ்சிப் பழம்

என்பது, உடன்போக்குரைத்த தோழிக்கு வழியருமை சொல்லி மறுத்தது.

உலகத்திலே மெத்தென்று சொல்லப்பட்ட அனிச்சப்பூவும், அன்னப் பட்சியின் இறகும், ஸ்திரீகள் காலுக்கு நெருஞ்சி முள்ளுப் போலே, வருத்தஞ் செய்யும் என்றவாறு.