பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

465

அறிவு முதலாயின நீங்கவும் நாணம் நீங்காது; அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பதாம்

1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்

காமுற்றா ரேறு மடல்

என்பது, நாணமும் நல்லாண்மையும் உடையவர்களுக்கு மடலூர முடியா தென்றவளுக்குச் சொல்லியது:

நாணமும் நல்ல ஆண்மையும் பண்டு உடையேன்; இப்போது காமம் மிகுந்த படியினாலே, நாணமும் ஆண்மையும் இழந்து, காமம் மிக்கவர் ஏறும் மடலினை யுடையேன் என்றவாறு.

நாணமிழக்கிறதாவது, இழிவான காரியங்களைச் செய்யத் துணிகிறது. நல்லாண்மையாவது, ஒன்றுக்கும் தளராமல் இருக்கிறது.

1134. காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு

நல்லாண்மை யென்னும் புணை

என்பது, நாணமும் நல்லாண்மையும் காம வெள்ளத்திற்குப் படகான படியினாலே அவை விட்டு நீங்கா என்றவளுக்குச் சொல்லியது:

நான் காம வெள்ளத்தைக் கடக்கிறதற்குப் படகாகக் கொண்ட நாணத்தையும் நல்லாண்மையையும், காமமாகிய வெள்ளம் இழுத்துக் கொண்டு போகின்றது என்றவாறு.

காமத்தைக் கடக்கிறதற்கு நாணமும் ஆண்மையும் தெப்பமாகா என்பதாம்.

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை யுழக்குந் துயர்

என்பது, இந்த ஆற்றாமையும் மடலும் உமக்கு எப்படி வந்தன என்றவளுக்குச் சொல்லியது: