பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

470

திருக்குறள்

யான் காதலனைக் கண்ணாலே காணப் பெற்றது ஒரு நாளேயாயினும், அலராகிய வசை ஒருநாளல்லாமல், சந்திரனை இராகு மறைக்கிறது உலகமெங்கும் பிரகாசமானாற்போல் எங்கும் பரவிற்று என்றவாறு.

1147. ஊரவர் கெளவை யெருவாக அன்னை சொல்

நீராக நீளுமிந் நோய்

என்பது

இந்தக் காம நோயாகிய பயிர், இந்தவூர் ஸ்திரீசனங்கள் சொல்லுகிற வசை வார்த்தை எருவாகவும், அந்த வசையைக் கேட்டுத் தாயானவள் கோபித்துக் கொண்டு சொல்லுகிற வார்த்தை தண்ணீராகவும் வளராநின்றது; இனி ஊரவர் சொல்லுகிறதும் தாய் சொல்லுகிறதும் பொறுக்க வேணும் என்றவாறு.

1148. நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற்

காம நுதுப்பே மெனல்

என்பது

அயல் மனுஷர் சொல்லுகிற வசையினாலே நாம் காமத்தை அடக்குவோம் என்று நினைக்கிறது, நெய்யை வார்த்து நெருப்பை அவிக்க நினைக்கிறதற்குச் சரி என்றவாறு.

வசையாலே அதிகமாகிறதல்லாமல் அடங்காது என்பதாம்.

1149. அலர்நாண வொல்வதோ அஞ்சலோம் பென்னார்

பலர் நாண நீத்தக் கடை

என்பது

தன்னை எதிர்ப்பட்ட போது ‘உன்னை விட்டுப் பிரியேன் நீ பயப்பட வேண்டாம்’ என்றவர். எல்லாரும் நாணத் தக்கதாக நம்மைப் பிரிந்து போனார்: இனி நாம் பலராலே சொல்லப்பட்ட வகைக்கு அஞ்சக் கூடுமோ கூடாது என்றவாறு.